ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். ஓபிஎஸின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவால் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். இதற்கு இரங்கல் தெரிவிக்கவே முதல்வர் நேரில் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இணையம் வழியாகவும் தொலைபேசி வாயிலாகவும் இரங்கல் தெரிவித்த முதல்வர், நேரில் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்திருக்கிறார். முதல்வருடன் அவரது மகனும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களும் சென்றிந்தனர்.
ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகிய ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென்று இந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பது அரசியல் விமர்சகரங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதிமுக இரண்டாக பிளவு பட்டிருப்பதாலும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸிற்கு இடையே பனிப்போர் நிகழ்ந்து வருவதாலும் திமுக மற்றும் ஓபிஎஸ்ஸின் இந்த சந்திப்பு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழக முதல்வரும் திமுக கட்சி தலைவருமான மு.க,ஸ்டாலினும் அவரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.