Page Loader
கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை
மாதவர பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பி.கே.சேகர் பாபு

கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை

எழுதியவர் Nivetha P
Jan 23, 2023
01:44 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு தற்போது ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன் படி, இனி வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் ஆந்திரா, திருப்பதி, காளஹஸ்தி போன்ற இடங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக தனி பேருந்து நிலையம் கடந்த 2018ம் ஆண்டு மாதவரத்தில் ரூபாய் 94.16 கோடியில் கட்டப்பட்டது. இதனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசின் ஆய்வு

தங்கும் அறை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற பல வசதிகள் செய்ய முடிவு

இதனையடுத்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிகுழும தலைவருமான பி.கே.சேகர்பாபு மாதவர பேருந்து நிலையத்தை நேற்று(ஜன.,22) ஆய்வு மேற்கொண்டார். இனி வடக்கு வடக்குநோக்கி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அந்த அனைத்து பேருந்துகளும் மாதவர பேருந்துநிலையத்திற்கு திருப்பிவிடப்படும். இதுதவிர, அங்கு ஆந்திர மாநிலபோக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தங்கும் அறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அது வசதியாக இல்லை என்பதால், கூடுதல் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண் பயணிகள் தங்கும் கூடங்களை 2, 4, 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, பேருந்து நிலைய முகப்பில் பயணிகள் பயன்பாட்டிற்காக எல்.இ.டி. அறிவிப்பு பலகை போன்ற பல வசதிகள் செய்யப்படவுள்ளது.