'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல்
அரசு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகளுக்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளது. பேருந்துகள் கொள்முதல் செய்யும்பொழுது மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க ஏதுவாக கொள்முதல் செய்யுமாறு உத்தரவிட வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஏன் அனைத்து பேருந்துகளையும் தாழ்த்தள பேருந்துகளாக கொள்முதல் செய்ய கூடாது. அதில் உள்ள பிரச்சனைகள் என்ன" என்று அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்துதுறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சாலைபோக்குவரத்து இயக்குனர் தாக்கல் செய்த பதில்மனுவில், 100 சதவிகித தாழ்த்தள பேருந்துகள் இயக்க அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தாழ்த்தள பேருந்துகளை பராமரிக்க தனி வசதிகள் தேவைப்படுவதாக அறிக்கை
மேலும், மழை காலங்களில் மழைநீர் பேருந்துக்குள் புகுந்து விட அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஒரு தாழ்த்தள பேருந்தின் விலை 80 லட்சம், அதனை ஒரு கி.மீ.'க்கு இயக்க ரூ.41 செலவாகும். அதுவே சாதாரண பேருந்து என்றால் அதில் பாதி செலவு தான் ஆகும் என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தாழ்த்தள பேருந்துகளை பராமரிக்க தனி வசதிகள் தேவைப்படுவதால் 100 சதவீதம் தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்படுவது என்பது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின், பேருந்தின் பின்புறம் மாற்று திறனாளிகளுக்காக சாய்தள பாதை அமைக்க முடியுமா போன்ற சாத்தியக்கூறுகள் குறித்து பொறியாளர்களிடம் கலந்துபேசி தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கினை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.