அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று தனித்தீர்மானம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவன விழாக்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்வுகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு தனித்தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் தலையாய மரியாதையின் வெளிப்பாடாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை உறுதியுடன் நிலைநிறுத்துவதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.
பின்னணி
தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்று பின்னணி
மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புகழ்பெற்ற 'மனோன்மணியம்' நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட பாடல் வரிகளே தமிழ்த்தாய் வாழ்த்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்பாடல் 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம் அரசு விழாக்களின் தொடக்கத்தில் முதன்முதலாகப் பாடப்படும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ 'மாநிலப் பாடலாக' அங்கீகரிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மாநிலத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும் எந்தவொரு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என அப்போதைய மாநில அரசால் ஆணையிடப்பட்டது.