பெரம்பூர் தொகுதி மக்களுக்கு ரூ.1,000 கோடி திட்டங்களுடன் ரூ.3 கோடி சிறப்பு நிதி அறிவித்த முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு நேற்று வருகை தந்தார் ஜோசப் விஜய். அப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். புதிதாக திறந்து வைக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய இ-சேவை மையத்தில் பொதுமக்கள் ஆதார், பான் கார்டு, குடும்ப அட்டை போன்ற பல்வேறு அரசுச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பெரம்பூர் தொகுதியில் வீட்டுவசதி, குடிநீர் மற்றும் நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து விஜய் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
தொகுதி மேம்பாடு
தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு
தொகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தத் தனது முழு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இதன் கீழ் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி மற்றும் வைஃபை வசதியுடன் கூடிய 6 நவீன பேருந்து நிழற்குடைகள் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளன.
மேலும் விளையாட்டு வளாகம், நவீன நூலகம், மற்றும் சத்தியமூர்த்தி நகரில் புதிய டயாலிசிஸ் மையம் அமைக்கவும் நிதி பிரிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் தங்குதடையின்றி உடனடியாகத் தொடங்கப்பட்டு, பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பாதுகாப்பை விரைந்து பூர்த்தி செய்ய அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.