LOADING...
முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் 3 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை தொடரும் என அறிக்கை
முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் 3 நாட்கள் சிகிச்சை தொடரும்

முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் 3 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை தொடரும் என அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 22, 2025
08:17 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தலைசுற்றலால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மேலும் மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 72 வயதான முதல்வர் ஸ்டாலின், தினமும் காலையில் அடையாறு போட் கிளப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை நடைபயிற்சிக்கிடையே தலைசுற்றல் ஏற்பட்டது. அதனால் நடைபயிற்சியை பாதியிலே முடித்த அவர், வீடு திரும்பிய பின்னர் வழக்கமான அரசியல் மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொண்டார். நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், தொடர்ந்து தலைசுற்றல் நீடித்ததால், ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனை 

முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் பல்துறை நிபுணர்கள் அவரை பரிசோதித்தனர். ஆரம்பகட்ட சிகிச்சையின் பின், மேலதிக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பின்னர் மருத்துவமனை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், "முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சிக்குள் லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரணம் கண்டறியும் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு வெளியான மற்றொரு மருத்துவ அறிக்கையில், "முதல்வர் ஸ்டாலின் தற்போது சீரான நிலையில் உள்ளார். அவருக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வு தேவைப்படும். மருத்துவமனையிலிருந்தபடியே அவர் அரசு செயல்பாடுகளை தொடருவார்" என தெரிவிக்கப்பட்டது. முதல்வருடன் அவரது மனைவி துர்கா மற்றும் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் உடன் உள்ளனர்.