நதிநீர் இணைப்பு குறித்து முதல்வரின் முக்கிய உத்தரவு
தென்மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் அங்குள்ள அணைகள், ஆறுகள் உள்ளிட்டவை நிரம்பி வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஓர் முக்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2008ம்.,ஆண்டு அப்போதைய முதல்வர்.கலைஞர் கருணாநிதி சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தப்படி, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758மில்லியன் கனஅடி வெள்ளநீரில், தாமிரபரணியாற்றின் அணைக்கட்டிலிருந்து 2,765 மில்லியன் கனஅடி நீரினை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தினை 4 நிலைகளாக செயல்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டதோடு அன்றைய முதல்வர்.கருணாநிதி 2009ம்.,ஆண்டு பிப்ரவரி.21ம் தேதி இதற்கான திட்டப்பணிகள் துவங்கப்பட்டது. அதன்படி, முதல் 3 நிலைகளின் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. நான்காவது நிலை பணிகளும் முடியும் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை
இதன்படி தூத்துக்குடியில் 8.10கி.மீ.,நீளத்திற்கும், திருநெல்வேலியில் 67.1கி.மீ.,நீளத்திற்கும் என மொத்தம் 75.2 கி.மீ.,நீளத்திற்கு வெள்ளநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப்பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூறப்படுகிறது. திருநெல்வேலியின் இராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட 3 சட்டமன்றத்தொகுதி, தூத்துக்குடி திருவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட 2 தொகுதி உள்ளிட்டவை பயன்படும் என்று தெரிகிறது. திருநெல்வேலியில் 32 கிராமங்கள், 177 குளங்கள், தூத்துக்குடியில் 18 கிராமங்கள், 75 குளங்கள் பயன்பெறும். தற்போது தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமாக இத்திட்டத்தின் மூலம் உபரிநீர் கொண்டுச்செல்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுடன் முதல்வர் இன்று(டிச.,18)ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்பின்னரே, இதற்கான சோதனையோட்டத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.