பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடக்கம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதே வேளையில், டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு பெறுவது குறித்துக் கூட்டுறவுத் துறை முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கி விநியோகத்தை தொடங்கி வைத்தார். இதனுடன் வேட்டி மற்றும் சேலையும் வழங்கப்பட உள்ளது.
டோக்கன் இல்லாதவர்கள்
பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்காதவர்கள் கவனத்திற்கு
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஏற்கனவே வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் பொதுமக்கள் தங்களின் அருகிலுள்ள நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பரிசை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் டோக்கன் பெற தவறிவிட்டாலும், அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் என்றால், உங்கள் ரேஷன் கடைக்கு சென்று ஊழியர்களை அணுகலாம். அவர்கள் உங்களுக்கான டோக்கனை வழங்குவார்கள். ரேஷன் கடைகளில் அந்தந்த தெருக்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதிகள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்கும். டோக்கன் இல்லாதவர்கள் அந்தத் தேதியில் சென்று பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். குறித்த தேதியில் வாங்க முடியாதவர்கள் அல்லது டோக்கன் விடுபட்டவர்களுக்காக சிறப்பு விநியோக தேதி அறிவிக்கப்படும் என்றும், அந்த நாளில் சென்று தடையின்றி பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.