தமிழ்நாட்டின் முதல் பெண் பழங்குடியின நீதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதல் பெண் பழங்குடியின நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 23 வயதான ஸ்ரீபதி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்தவர். பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்த இவர், திருமணமாகி இரண்டு குழங்கைகளுக்கு தாயான நிலையில் டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிக்கப்பட்ட போது, இவர் கருவுற்றிருந்தார். தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளாக இருந்துள்ளது. எனினும், சுவாரசியமாக தேர்வுக்கு முதல் நாள் அவர் பிரசவித்தார். மறுநாளே, தேர்வு எழுந்த வந்த ஸ்ரீபதி, தேர்வில் தேர்ச்சியடைந்தார்.
ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஸ்டாலின்,"திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்! பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்". "அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளித்து வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்"என்று பதிவிட்டுள்ளார்.