வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் அமைந்திருக்கும் கானம் லேட்டக்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பணிபுரியும் வட மாநில தெழிலாளர்களுடன் கலந்துரையாடினார். வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமீபத்தில் சில தகவல்களும் காணொளிகளும் வெளியாகின. இதற்கு வருத்தம் தெரிவித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது போன்ற சம்பவங்கள் வெறும் வதந்தீ என்று தமிழக காவல்துறை இதற்கு விளக்கம் அளித்திருந்தது. வதந்தியை பரப்பியதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மாநில தொழிலாளர்களின் நிலையை அறிந்துகொள்ள, பீகாரில் இருந்து அரசு குழு ஒன்று தமிழகத்தில் ஆய்வு நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
கானம் லேட்டக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை சந்தித்து பேசிய முதல்வர், பணி சூழல் பற்றியும், தமிழக மக்கள் எப்படி அவர்களுடன் பழகுகிறார்கள் என்பது பற்றியும் விசாரித்திருக்கிறார். இதற்கு பதிலளித்த தொழிலாளர்கள், பணிச்சூழல் மிகவும் நல்ல முறையில் இருப்பதாகவும், தமிழக மக்கள் சகோதரத்துடத்துடன் தங்களுடன் பழகுவதாகவும் கூறி இருக்கின்றனர். மேலும், அவர்களுடன் பேசிய முதல்வர், எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை வழங்கி வருகிறது என்றும் கூறியுள்ளார்.