LOADING...
கோவைக்கு ஜாக்பாட்! தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் இன்று திறப்பு
தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் இன்று திறப்பு

கோவைக்கு ஜாக்பாட்! தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் இன்று திறப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2025
10:14 am

செய்தி முன்னோட்டம்

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் இன்று (அக்டோபர் 9, 2025) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலத்திற்குப் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் தொழிலதிபர் ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு, கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை கட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் தற்போதைய மிக நீளமான மதுரை - நத்தம் மேம்பாலத்தை (7.3 கிமீ) விட நீண்டதாகும். இந்த மேம்பாலம் நாட்டிலேயே 3வது மிக நீளமான மேம்பாலம் என்ற பெருமையையும் பெறுகிறது.

வசதிகள்

மேம்பாலத்தின் கட்டமைப்பு வசதிகள்

தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக 45 நிமிடங்களாக உள்ள பயண நேரம், இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு 10 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 4 வழித்தட உயர்மட்ட மேம்பாலமாகவும், 6 வழித்தடங்களுடன் கூடிய விரிவுப்படுத்தப்பட்ட தரைவழிச்சாலையாகவும் என மொத்தம் 10 வழித்தடங்களை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக, பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள் உள்ளிட்ட உலகத் தரமான பாதுகாப்பு வசதிகள் மேம்பாலத்தில் செய்யப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி, சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் விரைவாகச் செல்ல வழிவகுக்கும்.