'மாணவர்களின் திசைகாட்டி'; தேசிய ஆசிரியர் தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதலீட்டிற்காக அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
386 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
தமிழகத்தில் ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்குவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு 386 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெறும் இதற்கான விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளார். இந்த 386 ஆசிரியர்களில் 342 பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஆவர். மற்றவர்களைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 38 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் விருது பெற உள்ளனர்.