
'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ்
செய்தி முன்னோட்டம்
அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா நிகழ்ச்சியை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் "அரசியல் திட்டம்" என்று கூறிய காங்கிரஸ் கட்சி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று இன்று அறிவித்துள்ளது.
அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை "ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசியல் திட்டம்" என்று கூறியுள்ளது.
தக்ஜன்
'தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி': காங்கிரஸ்
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளுமாறு மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு முன்பு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் காங்கிரஸ், "நமது நாட்டில் லட்சக்கணக்கானோர் பகவான் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ்/பாஜக நீண்ட காலமாக அயோத்தி கோவிலை அரசியல் திட்டமாக உருவாக்கி வருகிறது. முழுமையடையாத கோயிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைக்க உள்ளனர். தேர்தல் ஆதாயத்திற்காக இது வெளிப்படையாக நடத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.