உச்ச நீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணி 'ஜனநாயகப் பேரணி': CJI சூர்ய காந்த் சந்திப்புக்கு மறுப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியத் தலைமை நீதிபதி(CJI) சூர்ய காந்த்தை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளதாக என ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தியா கூட்டணியின் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி நடத்தப்படவுள்ள பேரணிக்கு முன்னதாக தலைமை நீதிபதியை சந்தித்து மனு அளிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரம் கோரியிருந்தனர். தலைமை நீதிபதியின் சந்திப்பு மறுக்கப்பட்ட போதிலும், காங்கிரஸ் கட்சி அறிவித்தபடி இன்று பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை விரைவில் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காரணம்
CJI சந்திப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம்
வாக்குத் திருட்டு புகார்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகல், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) ரத்து மற்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கத் திட்டமிட்டிருந்தனர்.
எனினும், எதிர்க்கட்சிகள் எழுப்பக் கோரிய இந்த விவகாரங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இத்தகைய சந்திப்பு ஏற்புடையதல்ல என்று தலைமை நீதிபதி தரப்பிலிருந்து மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாகப் பொறுப்பு மூலம் அரசாட்சியின் பணிகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வழக்கமான நீதித்துறை வழிமுறைகளை நாடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.