திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரள மாநிலத்தை சேர்ந்த கனிகராஜ் (46) என்பவர் மூணாறு பகுதியில் உள்ள தனியார் வங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் இயந்திரம் கள்ள நோட்டுகளை எடுத்துக்கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து, கனிகராஜ் கள்ள நோட்டுகள் செலுத்த முயன்றதை அந்த இயந்திரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வங்கி நிறுவனம் போலீசில் புகார் அளித்துள்ளனர். வங்கிக் கணக்கு எண்ணை வைத்து கனிகராஜை கண்டறிந்த கேரள போலீசார், அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 76 ஐநூறு ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
1,78,000 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் ராம்குமார், அழகர் மற்றும் திருமயத்தை சேர்ந்த பழனிக்குமார், குமாரலிங்கத்தை சேர்ந்த ஹக்கீம் ஆகியோரை போலீசார் கைது செய்தது. கைதான ஹக்கீம் அளித்த தகவலின்படி, இதில் சம்பந்தப்பட்ட தேனி மாவட்டம் பிரபு என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபு வீட்டில் இருந்த ஓர் பிரிண்டர், 1,78,000 மதிப்புள்ள 356 ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிரபுவிடம் விசாரணை நடத்தியதில், அவன் தான் ஓர் வனத்துறை அதிகாரி என்று கூறி வீடு எடுத்து கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து பிரபுவிற்கு வாடைக்கு வீடு கொடுத்த கொழுமம் ஊராட்சி மன்ற செயலர் சங்கிலித்துரை என்பவரிடமும் கேரள போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.