செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஷி ஜின்பிங்: டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க திட்டம்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் எல்லை மோதலுக்கு பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். கடந்த 2019 அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபரின் இந்திய வருகை நடைபெறவில்லை. கல்வான் மோதலால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்ட நிலையில், இந்த வருகை உறவை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
தூதரக நகர்வு
தூதரக நகர்வும் மாநாட்டின் முக்கியத்துவமும்
ஜின்பிங்கின் வரவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தீவிரமடையவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக சீனா செல்ல வாய்ப்புள்ளது.
மேலும், எல்லை விவகாரங்களை கையாளும் கலந்தாய்வு கூட்டம் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகளும் விரைவில் நடைபெறவுள்ளன.
இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப மற்றும் தூதரக ரீதியாகத் தீர்வு காண்பதுடன், பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இந்த சந்திப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி கொள்கைகள் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிரிக்ஸ் மாநாட்டின் இடையே இந்திய -சீன தலைவர்கள் பங்கேற்கும் இருதரப்புச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.