இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்!
சீனர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் இந்திய-சீன எல்லையில் தொடர் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சுமார் 400சீன வீரர்கள் அருணாச்சல் மாநிலத்தின் தவாங் பகுதிக்குள் நுழைந்தனர். இவர்களை 50க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர். இந்நிலையில், இவர்கள் அடிக்கடி இந்தியாவிற்குள் நுழைவது 'கார்டிசெப்ஸ்' என்ற அறிய வகை கம்பளி பூச்சி பூஞ்சையை திருடுவதற்கு தான் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பூஞ்சை மிக மிக அரிது என்பதால் இதற்கு 'இமயமலை-தங்கம்' என்ற பெயரும் உள்ளது. இந்த பூஞ்சைக்கு புற்றுநோயைக் கூட குணமாக்கும் திறன் இருப்பதால் இது சீனாவில் தங்கத்தை விட மதிப்புமிக்கது. இதற்காகத் தான் சீனர்கள் அடிக்கடி இந்தியாவிற்குள் நுழைவதாக இந்திய வீரர்கள் கூறியுள்ளனர்.
தங்கத்தை விட மதிப்புமிக்க பூஞ்சைகள்!
இந்த பூஞ்சை சர்வரோக நிவாரணியாக கருதப்படுவதால் இது சீனாவில் தங்கத்தை விட அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. இதை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பழக்கமும் சீனர்களுக்கு இருக்கிறது. உலகளவில் இதற்கான சந்தை விலை 1,072.50 மில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இதை மிக பெரிய அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது சீன நாடு தான் என்கிறது உலக புள்ளிவிவரங்கள். சீனாவில் கார்டிசெப்ஸின் அறுவடை முன்பைவிட குறைந்துள்ளது, ஆனால் அதன் தேவை மிகவும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவே சீன வீரர்கள் இதை திருடுவதற்காக இந்திய எல்லைக்குள் நுழைவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வகை பூஞ்சை தவாங் பகுதிகளில் அதிகம் விளைவதால் இவைகளையே சீனர்கள் குறிவைப்பதாக இந்திய வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.