சீனா உருவாக்கும் 100 டன் பால் கறக்கக்கூடிய க்ளோனிங் பசு மாடுகள்
சீனா: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உலகம் முழுவதும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இன்றியமையாத ஓர் தேவையாக இருந்து வருகிறது. இதனால் தான் உலக சந்தையில் பால் மற்றும் பால் பொருட்கள் வர்த்தகம் பல பில்லியன் டாலர்களாக உள்ளது. உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் சீனாவும் உள்ளது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ள சீனா பால் உற்பத்திக்காக பெரும்பாலும் வெளிநாட்டுமாடு இனங்களையே நம்பியுள்ளது என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 70சதவிகிதம் கறவைமாடுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் சீனநாடு இதற்கான மாற்று வழியாக க்ளோனிங் முறையில் புதிய வகை கறவை மாடுகளை உருவாக்கியுள்ளது.
'சூப்பர் கவ்ஸ்கள் தனது வாழ்நாளில் 100 டன்கள் அளவிலான பாலை வழங்கக்கூடியது
'சூப்பர் கவ்ஸ்' என்றழைக்கப்படும் இந்த மாடுகளை சீனாவின் வடமேற்கில் உள்ள விவசாயத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. கடந்த மாதம் 23ம்தேதி சீனாவின் நின்கிக்சியா மாகாணத்தில் க்ளோனிங் முறையில் 3 கன்றுக்குட்டிகள் உருவாக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. இந்த க்ளோனிங் திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி ஜின் யாபிங்க் கூறுகையில், இதுமாபெரும் திருப்புமுனையாகும். அடுத்த 2முதல் 3ஆண்டுகளுக்குள் 'சூப்பர் கவ்ஸ்'களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். க்ளோனிங் செய்யப்பட்டு பிறந்தக்கன்றுகள் 56.7கிலோ எடை கொண்டதாகவும், 76சென்டிமீட்டர் உயரம் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த 'சூப்பர் கவ்ஸ்'கள் தனது வாழ்நாளில் 100டன்கள் கொள்ளளவு எடை அளவுக்கு பால் வழங்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.