குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர்
ஜக்தல்பூரில் உள்ள லால் பாக் மைதானத்தில் நாளை(ஜன 26) நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், சத்தீஸ்கர் காவல்துறையின் திருநங்கை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேலும் பங்கேற்கிறார். திருநர் சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசு தின விழாவில் கலந்துகொள்வது வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த போலீஸ் அதிகாரிகள் சத்தீஸ்கர் காவல்துறையின் பஸ்தார் படையை சேர்ந்தவர்கள் ஆவர். பஸ்தார் போராளிகள் படை என்பது சத்தீஸ்கர் காவல்துறையின் சிறப்புப் பிரிவாகும். இது பஸ்தரின் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கி வருகிறது. குடியரசு தின அணிவகுப்பில் பால்புதுமையினர் பங்கேற்பது நாட்டிற்கு ஒரு நல்ல செய்தியை எடுத்து செல்லும் என்று பஸ்தாரின் இன்ஸ்பெக்டர் ஜெனரல்(ஐஜிபி) பி சுந்தர்ராஜ் குறிப்பிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
சத்தீஸ்கர் காவல் துறையில் நியமிக்கப்பட்ட 9 திருநங்கைகளில் 2 பேர் விழாவில் பங்கேற்பு
அணிவகுப்பில் முக்கிய விருந்தினராக முதலமைச்சர் கலந்து கொள்வார் என்று கூறிய அவர், "மாற்று பாலினத்தவருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும். நிச்சயமாக இது காவல்துறையை சமத்துவம் உள்ளதாகவும் முற்போக்கானதாகவும் மாற்றும்." என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதில் கலந்துகொள்ள இருக்கும் ரியா மாண்டவி, தாங்கள் அணிவகுப்பில் பங்கேற்பது மொத்த சமூகத்திற்கும் ஒரு பெருமையான தருணம் என்று தெரிவித்தார். "இந்த வாய்ப்பிற்காக அரசு மற்றும் காவல் துறைக்கு நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம்." என்றும் அவர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் காவல் துறை, ஆகஸ்ட் 2022 இல், பஸ்தார் போராளிகள் படையின் ஒரு பகுதியாக 9 திருநங்கைகளை அதிகாரிகளாக நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.