சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா
சத்தீஸ்கர் மாநிலத்தில் 'மோடியின் உத்தரவாதம் 2023' என பெயரிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு, இம்மாதம் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவில் இந்த மாதத்தில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி அன்று எண்ணப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் பிரச்சாரத்தை தீவிர்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சியான பாஜக தேர்தல் அறிக்கையையும் தற்போது வெளியிட்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறப்புகள் என்ன?
சத்தீஸ்கரில் வெல்வதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் முக்கிய அறிவிப்புகளாக, ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும், சத்தீஸ்கர் மாநில மக்களை அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வது, திருமணமான பெண்கள் மற்றும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹3,100 வழங்கப்படும் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ₹500க்கு வழங்கப்படும். நேரடி பயன் பரிமாற்றம் (DBT) மூலம் கல்லூரிக்குச் செல்வதற்கு மாணவர்களுக்கு மாதாந்திர பயணப்படி வழங்கப்படும் உள்ளிட்டவை பாஜக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.