LOADING...
சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட்: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட்: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 01, 2025
06:05 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் வலுவிழந்த போதிலும், அதன் தாக்கம் காரணமாகச் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் திங்கட்கிழமை 20 செமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி மேலும் நகர்ந்து வருவதால் மழை தொடரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்

திங்கட்கிழமை காலை முதல் பெய்து வரும் இடைவிடாத கனமழையால், அம்பத்தூர், ஆவடி, விருகம்பாக்கம் போன்ற பல குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிரீன்வேஸ் சாலை உட்படப் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. முக்கியச் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தண்ணீர் தேங்கிய இடங்களைச் சீரமைக்கத் தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் பல குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளன. இந்நிலையில், தொடர் மழை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

Advertisement