Loading...
சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரியா? இதோ உண்மை நிலவரம்
சென்னையில் பல வீடுகளுக்கு சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்து வந்துள்ளதாக புகார்

சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரியா? இதோ உண்மை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
10:50 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் பல வீடுகளுக்கு சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்து வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் சொத்து வரி கணக்கிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா நகர் பகுதியில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்திய கட்டிட உரிமையாளருக்குத் தற்போது ரூ. 28,000 வரி விதிக்கப்பட்டுள்ளது. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விளக்கம்

செயற்கைக்கோள் தரவுகள் மூலம் மறுஅளவீடு

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையரின் விளக்கத்தின்படி, பொதுமக்கள் வழங்கிய விவரங்கள், புவிசார் தகவல் அமைப்பு (GIS) மற்றும் செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் கட்டிடங்களின் அளவீடுகள் ஒப்பிடப்பட்டு, சொத்து வரி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே பல இடங்களில் வரித் தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆணையர் ஜி.எஸ்.சமீரன், சென்னை மாநகராட்சியில் புதிதாகச் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

மேல்முறையீடு

15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்

ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு வரி செலுத்தி வந்த சொத்து உரிமையாளர்களுக்கு மட்டுமே தற்போதைய மறுஅளவீட்டின் படி திருத்தப்பட்ட வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சொத்து வரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் சொத்து உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT