இந்தியாவில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழலுள்ள நகரங்கள் பட்டியல் - சென்னை முதலிடம்
சமீபத்தில் 'அவதார் க்ரூப்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றினை நடத்தியது. அதன்படி, ஐ.நா. அமைப்பினர் குறிப்பிட்ட காரணிகளுடன் இந்தியாவில் பெண்களுக்கான பணி பாதுகாப்பு சூழல் கொண்ட முக்கிய நகரங்கள் என்ற பெயரில் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சமூகம் மற்றும் தொழிற்சாலைகள் அடிப்படையில் டாப் 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பணிபுரியும் தொழிற்சாலைகள், வாழ்வதற்கேற்ற விஷயங்கள் எளிமையில் கிடைக்கப்பெறுதல், பாதுகாப்பு போன்றவை தென்னிந்தியாவில் கிடைக்கிறது என்பது பெண்களின் கருத்தாக உள்ளது. இதன்படி, பெண்களுக்கு பாதுகாப்பான பணி சூழல் உள்ள நகரங்கள் என்ற அடிப்படையில் சென்னை 78.41 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து, புனே மற்றும் பெங்களூரு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
வடஇந்தியாவை விட தென்னிந்தியாவிலேயே பெண்கள் பணிபுரிய அதிக விருப்பம் தெரிவித்துள்ளார்கள்
இதனை தொடர்ந்து கோவை, மதுரை நகரங்கள் 9 மற்றும் 10வது இடங்களை பிடித்துள்ளது. இதே போல். பெண்களுக்கான சிறந்த வாழ்க்கை குடியீடு கொண்டது என்ற வகையில், வடஇந்தியாவை விட தென்னிந்தியாவில் தான் பெண்கள் பணிபுரிய அதிகம் விரும்புகிறார்களாம். ஏனெனில், இங்கு பல நகரங்கள் தொழிற்சாலை மிகுந்துள்ளதோடு, அவற்றில் பெண்கள் அதிகளவில் பணிபுரிவது முக்கிய காரணியாக கூறப்படுகிறது. மேலும், மாநில சராசரியில் தென்னிந்தியாவை சேர்ந்த 3 மாநிலங்கள் முதல் 3 இடத்தை பிடித்துள்ளது. கேரளா 55.67 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், தமிழகம் மற்றும் கர்நாடகா அடுத்த 2 இடங்களிலும் உள்ளது. இந்த நகரங்களின் பட்டியலில் தலைநகரான டெல்லி 41.36 புள்ளிகள் பெற்று 14வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.