சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்: புதிய வழித்தடங்கள் மற்றும் கட்டம்-2 பணிகள் குறித்த பட்ஜெட் அறிவிப்புகள்
செய்தி முன்னோட்டம்
தமிழக பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் புதிய விரிவாக்கப் பாதைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னையில் 118.9 கி.மீ நீளத்தில் மூன்று முக்கிய வழித்தடங்களைக் கொண்டு ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் கட்டம்-II பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் முதற்கட்டமாக, பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரை வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கும் 14.64 கி.மீ நீளமுள்ள 11 ரயில் நிலையங்களை கொண்ட பாதை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட உள்ளது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டங்கள்
ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டங்கள்
மாநில அரசால் விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் விரைவான நிதிப் பங்களிப்பு மற்றும் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரை, பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரை உள்ளிட்ட வழித்தடங்கள் பரிந்துரைப்பு பட்டியலில் உள்ளது.
தொழில் நகரமான ஓசூரின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் இணைந்து தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.