சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமசந்திரன் இடம்பெற கூடாது என்றும், கல்லூரி மாணவிகளின் பிரதிநிதி, பெற்றோரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுமாறு குழுவினை மாற்றியமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து பெயர் வெளியிட விரும்பாத 7 மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீதான விசாரணைகள் நடத்தப்பட்டு மீண்டும் இந்த மனு இன்று(ஏப்ரல்.,26) விசாரணைக்கு வந்தது.
பாலியல் தொடர்பான வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம்
அப்போது நீதிபதி தண்டபாணி, கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் தடுக்கும் வகையில் விரிவான கொள்கையினை வகுக்க வேண்டும் என்று கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீதிபதி கூறுகையில், கொள்கைகள் வகுக்கப்பட்ட பின்னர் அமைக்கப்படும் உள் விசாரணை குழுவில் பெற்றோர், மாணவியர் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும் கலாஷேத்ரா பாலியல் தொல்லை தொடர்பான வழக்குகளை போலீசாரும், நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவும் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். தொடர்ந்து இவ்வழக்கினை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.