சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நேரு(47). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனமான ஹிஜாவு நிறுவனத்தில் முகவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 15ஆயிரம் வரை வட்டி கிடைக்கும் என்றுகூறி நிறுவனத்தை மக்கள் மத்தியில் விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி பலர் இதில் முதலீடு செய்துள்ளார்கள். நேருவும் இதில் பலரை பேசி முதலீடு செய்ய வைத்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் மக்களுக்கு கூறியவாறு வட்டி பணத்தையும் கொடுக்கவில்லை, முதலீடு தொகையையும் அளிக்கவில்லை. இதனால் பணத்தை இழந்த சுமார் 10,000 பேர் ரூ.800கோடி வரை தங்களிடம் பணமோசடி செய்ததாக இந்த நிறுவனம் மீது தமிழக காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்கள்.
பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரை அடுத்தடுத்து கைது செய்த காவல்துறை
இதனையடுத்து போலீசார் இதில் சம்பந்தப்பட்ட முகவர் நேரு உள்பட 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்நிலையில் நவம்பர் மாதம் கைதான நேரு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனால் அவர் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவுளைச்சலில் இருந்த நேரு நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றம் சென்று வந்துள்ளார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு வந்த நிலையில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நேருவின் உடலை கைப்பற்றினர். ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.