கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி
கள்ளக்குறிச்சி, கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13ம்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு தகவலறிந்து விரைந்து சென்ற சின்னசேலம் போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜூலை 17ம்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. தொடர்ந்து 5 நாட்கள் நடந்த கலவரத்தில் பள்ளி பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டு, பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை வகுப்புகள் இயங்குவது குறித்து 6 வாரம் கழித்து முடிவு செய்யப்படும்
இதன் பிறகு, மாணவியின் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பள்ளி நிர்வாகமும் தனது வாதங்களை முன்வைத்தது. இதனையடுத்து 9 முதல் 12ம் வகுப்பு வரை இயங்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தற்போது 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்கலாம் என்றும், எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் துவங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பிறகு முடிவு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பள்ளியில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 9 முதல் 12 வகுப்புவரை சுமூகமான முறையில் வகுப்புகள் நடந்து வருகிறது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.