Page Loader
ஈஷா ஆதியோகி சிலை கட்டமைப்பு - நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
ஈஷா ஆதியோகி சிலை கட்டமைப்பு - நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈஷா ஆதியோகி சிலை கட்டமைப்பு - நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

எழுதியவர் Nivetha P
Aug 24, 2023
07:01 pm

செய்தி முன்னோட்டம்

கோவை-வெள்ளையங்கிரி மலையடிவாரத்தில் இயங்கிவரும் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள வனவிலங்குகளுக்கு இடையூறாகவும், அங்கு வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும் ஈஷா யோகாமையத்தின் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என்றும் கூறி கடந்த 2017ம்ஆண்டு பழங்குடியின பாதுகாப்பு சங்கத்தலைவர் முத்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே தமிழ்நாடு நகரமைப்பு திட்டமிடல் துறையினர், ஆதியோக சிலை மற்றும் கட்டிடங்கள் கொண்ட ஈஷா மையம் 109 ஏக்கர் பரப்பளவில் விதிகளை மீறி கட்டப்படுவதால் 2012ல் அதன் பணிகளை நிறுத்துமாறும், மூடி சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈஷா நிறுவனம் மேல்முறையீடு செய்தது என்று தெரிவித்துள்ளனர்.

விசாரணை 

ஆவணங்களை கோவை நகர திட்ட இயக்குனர் ஆய்வு செய்ய உத்தரவு 

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று(ஆகஸ்ட்.,24)நீதிபதிகள் ஆதிகேசவலு-கங்காபுர்வாலா ஆகியோர் அமர்வின் முன்னிலையில் வந்தது. அப்போது குறிப்பிட்ட இடத்தில் கட்டிடம் கட்ட திட்ட அனுமதி, கட்டுமான அனுமதி உள்ளிட்டவை வழங்கப்பட்டதன் ஆவணங்கள் எதுவும் தங்களிடமோ, இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு நகரமைப்புத்திட்டமிடல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மலை இடர் பாதுகாப்பு அமைப்பினரிடமிருந்து பெறப்படும் சான்றிதழ், சுற்றுசூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியச்சான்றிதழ், வழிபாட்டு தலத்துக்கான தடையில்லா சான்றிதழ்கள் உள்ளிட்டவையும் ஈஷா நிறுவனத்திடம் இல்லை என்று கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் இருதரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இயக்குனர் ஆய்வுச்செய்து, அதில் உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.