தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணப்பட்ட மக்கள்; திணறிய சென்னை
கடந்த இரு தினங்களில் மட்டும் தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து, ரயில்கள் வாயிலாக சென்னையில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகியுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து நாள்தோறும் இயங்கிவரும் 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 11,176 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Twitter Post
#NewsUpdate | ஒரே நாளில் சென்னையிலிருந்து 2.31 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்!#SunNews | #DeepavaliSpecialBus | #Chennai pic.twitter.com/oeneaxBYbu— Sun News (@sunnewstamil) October 30, 2024
பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி பயணித்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
நேற்றைய தினம் 2,125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதில் பயணிக்க பிற்பகல் முதலே பேருந்து நிலையங்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாலை நேரத்தில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர்கள், சொந்த வாகனங்களில் பயணித்தோர், கடைகளுக்கு துணி, பட்டாசு வாங்கச் சென்றவர்கள், திடீர் மழை ஆகிய காரணங்களால் முக்கிய சாலைகள் திணறின. குறிப்பாக தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் அதிகளவிலான மக்கள் திரண்டனர். அனைத்து இடங்களிலும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தது.