மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு
சென்னைக்கு வடகிழக்கே 90 கிமீ தூரத்தில் நிலை கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல் காரணமாக தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே 'ரெட் அலர்ட்' விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். மேற்கூறிய நான்கு மாவட்டங்களைத் தவிர வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, தமிழகத்திலுள்ள 23 மாவட்டங்களில் இந்த மிக்ஜாம் புயலையொட்டி மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
47 ஆண்டுகளில் இல்லாத அளவு மழைப்பொழிவு:
மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. நேற்று மாலை தொடங்கி, தற்போது இடியுடன் கூடிய மழை சென்னையில் நீடித்து வருகிறது. இன்று இரவு வரை இந்த மழை நீடிக்கும் என எதிர்பார்க்ப்படும் நிலையில், பல்வேறு இடங்களில் மரம் விழுந்து பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை வரை சென்னையில் 340 மிமீ மழை பதிவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் இதே அளவு மழை பதிவாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த முறை மிக அதிக அளவிலான மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.