LOADING...
18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்... சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் விரைவில் அறிமுகம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகம்

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்... சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் விரைவில் அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2025
09:25 am

செய்தி முன்னோட்டம்

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மீண்டும் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டக்கர் (Double Decker) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த 20 மின்சார டபுள் டக்கர் பேருந்துகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் 1970களில் முதன்முதலில் டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர், 1997லும் மீண்டும் அறிமுகமாகி, கடைசியாக 2008 ஆம் ஆண்டு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது, மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் அசோக் லேலண்ட் நிறுவனம் இயக்கி வருவது போல, சென்னையிலும் தனியார் பங்களிப்புடன் இந்தச் சேவையைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சோதனை

பிராட்வே - தாம்பரம் இடையே சோதனை ஓட்டம்

இதன் சோதனை முயற்சியாக, பிராட்வே - தாம்பரம் தடத்தில் மின்சார ஏசி டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டது. இந்த மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதுடன், சாதாரண மின்சாரப் பேருந்துகளை விட 1.5 மடங்கு அதிக அளவில், அதாவது கிட்டத்தட்ட 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. மாநகரப் பேருந்துகளில் அடிக்கடி ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும், பயணிகளின் தேவை அதிகம் உள்ள வழித்தடங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வழித்தடங்களிலும் இந்தச் சேவையைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்துச் சேவைக்குப் புதிய அழகு சேர்க்கும் வகையில் ஜனவரி மாதத்திற்குள் இந்தச் சேவையைத் தொடங்கப் போக்குவரத்துத் துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது.