சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமைவாய்ந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் புனரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது. உடனே அங்கிருந்த மக்கள் இது குறித்து பாரிமுனை, பூக்கடை பகுதி தீயணைப்பு நிலையத்திற்கும், அப்பகுதி காவல்துறைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்கள். அந்த தகவலின் படி. சம்பவ இடத்திற்கு 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள், அரக்கோணம் மற்றும் சென்னை அடையாறு பகுதியிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் அதிநவீன உபகரணங்களோடு சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வினை மேற்கொண்டனர். 300க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்
இதனையடுத்து இடிபாடுகளை அகற்றும் பணியானது நேற்று(ஏப்ரல்.,19) முழுவதும் நீடித்த நிலையில், சுமார் 14 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினையடுத்து கட்டிட உரிமையாளர்கள் தீபக் சந்தன், பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது. கட்டிடத்தை பழுதுப்பார்க்கும் முன்னர் அனுமதிப்பெறாதது, பொதுமக்களுக்கு அபாயகரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கான உரியப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் ஏன் பணியை மேற்கொண்டனர்? என்பது போன்ற விஷயங்களுக்கு விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அந்த கட்டிட உரிமையாளர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறைக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.