நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
சென்னையில் மிகப்பெரிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கு அதிகளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் இந்த ரயில் நிலையம் நாட்டிலேயே முதல் அமைதியான ரயில் நிலையம் என்ற புகழை தன் வசப்படுத்தியுள்ளது. அதன்படி இங்கு, பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த குரல் மூலம் ரயில்வே அறிவிப்புகளை தெரிவிப்பதற்கு பதிலாக, கூடுதலான தகவல் மையங்களும், டிஜிட்டல் முறையிலான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி ஆடியோ விளம்பரங்களும் இருக்காது
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கடந்த சனிக்கிழமை உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதன் படி, அனைத்து டிஜிட்டல் பலகைகளும் செயல்படும் வகையில் இருப்பதையும், தகவல் மையங்களில் போதுமான பணியாளர்கள் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்யுமாறு அவர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி ஆடியோ விளம்பரங்களும் இருக்காது என்று சென்னை ரயில்வே கோட்டத்தின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது பரிசோதனை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது என்றும், புறநகர் ரயில்களில் குரல் மூலமே அறிவிப்புகள் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.