சென்னையில் புத்தக கண்காட்சி விழா அறிவிப்பு; எப்போது?
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சி, வரும் டிசம்பர் 27ஆம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 17 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி, நந்தனம் YMCA மைதானத்தில் வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியினை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைக்கின்றனர். துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதலமைச்சர் வழங்க உள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Twitter Post
விடுமுறை நாட்களிலும் நடைபெறும் புத்தக கண்காட்சி
புத்தகக் காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும். மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எல்லா புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும். பபாசியில் உறுப்பினர் அல்லாதவர்களாக இருந்தாலும், விண்ணப்பித்தவர்களுக்கு அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 17 நாளும் தினசரி மாலை சிந்தனை அரங்கம் நடைபெறும் எனவும், அதில் அறிவுசார் பெருமக்கள் உரையாற்றுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இறுதி நாளில் நீதியரசர் ஆர்.மஹாதேவன் இறுதியுரை ஆற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.