77வது குடியரசு தின விழா: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபோது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மூவர்ணக் கொடிக்கு மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய முப்படை வீரர்கள், கடலோரக் காவல்படை மற்றும் தமிழகக் காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு நடைபெற்றது. பல்வேறு அரசுத் துறைகளின் சாதனைகளை விளக்கும் வாகன அணிவகுப்பும் பொதுமக்களைக் கவர்ந்தது.
விருதுகள்
விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொடியேற்றத்திற்குப் பிறகு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும், வீரதீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அண்ணா பதக்கம் வீரதீரச் செயல்களுக்காக பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு வழங்கப்பட்டது. வேளாண்மைத் துறை விருது அதிக உற்பத்தித் திறன் பெற்று சாதனை படைத்த விவசாயிகளுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க சுமார் 1 லட்சம் போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.