சமர்ப்பிக்கப்பட்ட SIR படிவத்தின் நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்வது எப்படி? பிழையிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
செய்தி முன்னோட்டம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணியின்போது நீங்கள் சமர்ப்பித்த படிவத்தின் நிலை (status) என்ன என்பதை இப்போது எளிதாக ஆன்லைனில் சரிபார்க்க முடியும். வாக்காளர் விவரங்கள் பூத் லெவல் அதிகாரியால் (BLO) முறையாகப் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்கான எளிய வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எப்படி சரிபார்ப்பது என்பதை இதில் விரிவாக பார்க்கலாம்.
செயல்முறை
சரிபார்க்கும் முறை
முதலில் voters.eci.gov.in என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள 'Fill Enumeration Form' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் புதிய பயனராக இருந்தால், மொபைல் எண் மற்றும் கேப்ட்சா பயன்படுத்திப் பதிவு செய்து, பிறகு உள்நுழையவும். உள்நுழைந்த பிறகு, மீண்டும் 'Fill Enumeration Form' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் EPIC (வாக்காளர் அட்டை) எண்ணை உள்ளிட்டு 'Search' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
நிலை
விவர நிலையை அறிதல்
உங்களுடைய படிவம் தேர்தல் ஆணையத்தின் தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தால் "Your form has already been submitted with mobile number XXXXXXXXXX" என்ற செய்தி தோன்றும். அதாவது, உங்கள் விவரங்கள் வெற்றிகரமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை பதிவேற்றப்படவில்லை என்றால் எந்தச் செய்தியும் வராமல், அதற்குப் பதிலாகப் புதிய படிவம் திறக்கப்படும். உங்கள் படிவத்தில் உள்ள தகவல்களில் சிக்கல் இருந்தால், உதாரணமாக காட்டப்படும் மொபைல் எண் தவறாக இருந்தாலோ அல்லது நீங்கள் சமர்ப்பிக்காதபோதும் 'submitted' என்று நிலை காட்டினாலோ, உடனடியாக உங்கள் உள்ளூர் BLOவைத் தொடர்புகொள்ளவும். BLOக்கள் படிவங்களைப் பதிவேற்றுவதற்கு டிசம்பர் 4 ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதுவரை பொறுமையாக இருக்கும்படியும், தொடர்ந்து அழைப்பதைத் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.