'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங்
பஞ்சாப் காவல்துறையால் வெவ்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வரும் தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இன்று(மார் 29) ஒரு வீடியோவை வெளியிட்டார். ஒரு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இந்த பதிவு செய்யப்பட்ட வீடியோவில், அம்ரித்பால் சிங், மார்ச் 18 அன்று போலீஸ் அவரை தேட தொடங்கிய பின்னர் நடந்த சம்பவங்களை விவரித்தார். வீடியோ எப்போது பதிவுசெய்யப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் இந்த வீடியோ மூலம், அம்ரித்பால் சிங், பைசாகியில் நடைபெறும் சர்பத் கல்சா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உலகம் முழுவதும் உள்ள சீக்கிய அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அம்ரித்பால் சிங் சரணடைய இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின
மேலும், அரசாங்கம் சீக்கியர்களை ஏமாற்றி விட்டது என்றும் சீக்கியர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் இந்த வீடியோவில் அவர் கூறி இருந்தார். சர்பத் கல்சா என்பது சீக்கிய சமுதாயம் தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்க பல்வேறு சீக்கிய அமைப்புகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஆகும். இதில் நடக்கும் விவாதத்திற்குப் பிறகு, அகல் தக்த்தின் ஜாதேதர், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்வுகளைப் பின்பற்றுமாறு சமூகத்தை வழிநடத்துவார். அம்ரித்பால் சிங் பஞ்சாபிற்கு திரும்பிவிட்டார் என்றும் பொற்கோவிலில் சரணடைய திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை அடுத்து, இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.