திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை
ஆந்திர மாநிலம், திருப்பதி மலையில் 100 சதவீதம் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு திருப்பதி தேவஸ்தானம் முயற்சி செய்து வருகிறது. அதன் முயற்சியாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் தங்கள் பங்காக திருப்பதியில் ஓடும் தேவஸ்தான கார்களில் பல கார்களை மின்சார கார்களாக மாற்றம் செய்துள்ளனர். தற்போது இயங்கி வரும் இலவச பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே ஹைதராபாத் ஒலக்ட்ரா என்னும் பெயரில் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் மெகா இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடி மதிப்புள்ள 10 மின்சார பேருந்துகளை நன்கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
திருப்பதி கோயில் முன்பு பேருந்துகளை நிற்க வைத்து சிறப்பு பூஜைகள்
இந்நிலையில் தற்போது இந்த பேருந்துகளை நேற்று(மார்ச்.,28) திருப்பதி மலைக்கு வந்த நிலையில், மின்சார பேருந்துகளை இயக்க தேவையான பயிற்சிகள் தேவஸ்தான ஓட்டுநர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. நன்கொடை கொடுத்த நிறுவனம் திருப்பதி கோயில் முன்பு பேருந்துகளை நிற்க வைத்து சிறப்பு பூஜைகளை செய்து பின்னர் தேவஸ்தான நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பேசுகையில், திருமலையில் காற்றில் மாசுப்படுவதை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் திருமலையில் ஓடும் வாடகை கார்கள் கூட எலக்ட்ரிக் கார்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ள 10 பேருந்துகளுமே திருமலையில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்ய பயன்படுத்த தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.