ஊழல் வழக்கு: இரண்டாவது நாளாக சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை
திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம் இரண்டாவது நாளாக இன்று ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் சிஐடி அதிகாரிகளை கொண்ட ஒரு குழு அவரை விசாரித்து வருகிறது. சந்திரபாபு நாயுடுவை இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க ஊழல் தடுப்புப் பணியக(ஏசிபி) நீதிமன்றம் சிஐடிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. செப்டம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அவரிடம் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது
நீதிமன்றம் விதித்தபடி சந்திரபாபு நாயுடு விசாரணைக்காக சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி எம்ஆர் ரவி கிரண் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இரண்டு நாள் போலீஸ் காவல் மற்றும் நீதிமன்றக் காவலின் நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை 5 மணிக்குள் 'ப்ளூ ஜீன்ஸ்' செயலி மூலம் நாயுடுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிஐடி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அவர் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார். இன்றுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்கள் ஆகிறது