ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி அவர் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை இறுதிக்கட்டத்தில் இருக்கும்போது அதில் தலையிட முடியாது என்று கூறி ஆந்திர உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு
மேலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 482க்கு(பொய் சொத்துக் குறியைப் பயன்படுத்தியதற்காக தண்டனை) கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் கூறி இருந்தது. திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார். இந்த நிதி மோசடியின் பின்னணியில் சந்திரபாபு நாயுடுவும் மற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது இந்த ஊழல் நடந்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.