புதுச்சேரியின் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா ராஜினாமா - காரணம் என்ன?
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக.,கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதல் அமைச்சர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவராக காரைக்கால் நெடுங்காடு தொகுதியினை சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகுத்தார். இந்நிலையில் இவர் இன்று(அக்.,10)திடீரென தனது பதவியினை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர், 'ஆதிக்க சக்தி மற்றும் சூழ்ச்சி அரசியலுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது. எனவே எனது தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, 'தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் பெண்கள் அரசியலில் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்னும் பொதுவான கருத்து உள்ளது' என்று கூறியுள்ளார்.
சாதிய ரீதியாக தாக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார் அமைச்சர்
மேலும் அவர், "ஆனால் கடின உழைப்பு மற்றும் மனதைரியத்தோடு இறங்கினால் களத்தில் கவலையில்லாமல் நீந்தலாம் என்று பல முன் உதாரணங்கள் உண்டு. அதனை நம்பி, இரவுப்பகலாக உழைத்து, கிடைக்கும் சிறு வாய்ப்பினை கூட சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்காக உழைத்தேன்"என கூறியுள்ளார். "மக்கள் செல்வாக்கு இருந்தாலும், சூழ்ச்சி அரசியலில் பணம் என்னும் பூதத்தோடு போராடுவது எளிதல்ல" என்றும், "தலித் இனப்பெண் என்னும் உறுத்தல் மற்றவர் மனதில் இருந்ததை அறியவில்லை" என்றும் வேதனை தெரிவித்துள்ளார். பாலியல் ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் தொடர்ந்து தாக்கப்படுவதை உணர்ந்ததாக கூறும் அவர், தனக்கு பதவி வழங்கிய முதல்வருக்கு நன்றிகள் என்றும், தனது ராஜினாமாவால் காலியாகும் இப்பதவியை வன்னியர், தலித் போன்ற சிறுபான்மை சமூகம் சார்ந்த எம்.எல்.ஏ.வுக்கு வழங்குமாறும் கோரியுள்ளார்.