காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை, Z-பிரிவாக உயர்த்தியுள்ளதாக நேற்று மாலை அறிவித்தது. கனடாவில் காலிஸ்தானி குழுக்கள் வெளியிட்ட புதிய சுவரொட்டிகள் மூலம், பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. காலிஸ்தானி ஆதரவாளர், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள சீக்கிய குருத்வாராவிற்கு வெளியே, இந்தியாவில் இருந்து தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து "வாக்கெடுப்பு" நடத்தப்படும் என்று அறிவித்து, அந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், பாலஸ்தீனத்தின் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் போல, காலிஸ்தானும் நடத்தும், என கூறிய நேரத்தில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பகிரங்கமாக மிரட்டல் விடும் காலிஸ்தானியர்கள்
இந்த சர்ச்சைக்குரிய சுவரொட்டி, கடந்த செவ்வாயன்று, காலிஸ்தானி குழுவான சீக்கியர்களுக்கான நீதிக்கான குழுவினரால் (SFJ) ஒட்டப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த சுவரொட்டிகளின்படி, அக்டோபர் 21 அன்று சர்ரேயில் இருந்து இந்திய துணைத் தூதரகம் வரை போராட்டம் நடைபெறும் என்றும், அதனை தொடர்ந்து, அக்டோபர் 29 அன்று வான்கூவரில் "வாக்கெடுப்பு" நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிஜாரின் மரணத்திற்கு நீதி கோரும் வகையில் இந்த போராட்டம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த சுவரொட்டிகளில், இந்தியா பிரதமர், மத்திய அமைச்சர் தாண்டி மேலும் இருவர் படங்களும் ஒட்டப்பட்டு இருந்தது. அவர்கள், கனடாவிற்கான இந்திய தூதர், சஞ்சய் குமார் வர்மா மற்றும் தூதரக ஜெனரல்கள் மணீஷ் மற்றும் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோர்.