ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் சிறப்புப் படைகளை அங்கு அனுப்ப உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கடந்த வாரம் தீவிரவாத தாக்குதல் நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்தாருக்காக உணவுகளை ஏற்றிக்கொண்டு லாரியில் சென்ற 5 ராணுவ வீரர்கள் கடந்த வாரம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் 30 பயங்கரவாதிகள் செயல்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி 20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் மே 22 முதல் 24 வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற உள்ளது.
சீனாவைத் தவிர அனைத்து ஜி20 உறுப்பினர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்
"அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை, ஜி 20 கூட்டம் மற்றும் அமர்நாத் யாத்திரை ஆகியவற்றிற்கான புதிய பாதுகாப்பு திட்டத்தை நாங்கள் சமீபத்தில் உருவாக்கி உள்ளோம்." என்று ஜி 20 கூட்டத்தின் ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்புப் படைகள் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட உள்ளன. சீனாவைத் தவிர அனைத்து ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் ஸ்ரீநகரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் மே 24 அன்று ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி மற்றும் குல்மார்க் ஸ்கை-ரிசார்ட் ஆகிய சில முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதற்கு பிறகு, மே 25ஆம் தேதி அவர்கள் டெல்லி திரும்புவார்கள்.