ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1.4 லட்ச யாத்ரீகர்களுக்கு அந்நிய செலாவணி அட்டைகளை வழங்க மையங்கள்
'பணமில்லா ஹஜ்' என்பதை வலியுறுத்தி, வருடாந்திர யாத்திரை செல்பவர்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எஸ்பிஐ வங்கி மூலம் அந்நிய செலவாணி அட்டையினை வழங்கும் நடவடிக்கையினை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி 2023ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய இஸ்லாமியர்களுக்கு மிகுந்த வசதிகளையும், மலிவான விலையிலும் பயணம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அண்மையில் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதையும், யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்படுவதும் இந்தாண்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கப்பட்டவர்களுள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1.4 லட்சம் பேர் மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருப்போர் விவரம் உடனே வெளிப்டையாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியுடன் கைகோர்த்த இந்திய அரசு
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில், இந்தாண்டு நிச்சயம் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைனில் 1.84 லட்சம் விண்ணப்பதாரர்களின் 70க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 10,621 பேரும், 'மெஹரம்(ஆண்துணை)' இல்லாமல் ஹஜ் செய்யும் 4,314 பெண்கள் உள்பட 14,935 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண் துணை இல்லாமல் பெண்கள் குழு அதிகளவில் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. தொடர்ந்து நாடு முழுவதும் 22,000 கிளைகளை கொண்டுள்ள எஸ்பிஐ வங்கி கிளைகள் மூலம் அரேபியாவில் தங்கியிருக்கையில் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அந்நிய செலவாணி அட்டைகள் மற்றும் கட்டாய காப்பீடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.