டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மீதான சிறுநீரகக் திருட்டு குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு விசாரணை
டெல்லி அப்பல்லோ குழும மருத்துவமனைகள் மீது எழுந்துள்ள, உடல் உறுப்பு திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS), தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (NOTTO) இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. "மியான்மரில் இருந்து ஏழை மக்கள் தங்கள் உறுப்புகளை லாபத்திற்காக விற்க தூண்டப்படுவதாகவும், அப்பல்லோ மருத்துவமனையும், டாக்டர் சந்தீப் குலேரியாவும் சட்டவிரோத சிறுநீரக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஊடக அறிக்கையை" அந்த கடிதம் சுட்டிக் காட்டுகிறது. உடல் உறுப்புகளை விற்பது, விற்கும் நபர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என அக்கடிதம் அடிக்கோடிட்டு காட்டி, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறுகிறது.
ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க NOTTO இயக்குனருக்கு உத்தரவு
மேலும் அந்த கடிதம், மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் (தொட்டா), 1994 அத்தியாயம் IV, பிரிவு 13(3)(iv) படி, டெல்லியின் தேசிய தலைநகர் பகுதியில், இது குறித்து விசாரிக்க டெல்லியின் சுகாதாரத் துறை செயலாளர் தான் சரியான அதிகாரி என கூறுகிறது "இது சம்பந்தமாக, இந்த விஷயத்தை ஆய்வு செய்து, THOTA, 1994 இன் விதியின்படி தகுந்த நடவடிக்கை எடுத்து, ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு" NOTTO இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டுகளை வைத்த தி டெலிகிராப்
இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகை குற்றம் சாட்டியிருந்ததை, "முற்றிலும் தவறான தகவல்" என இந்திரபிரஸ்தா மெடிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஐஎம்சிஎல்) தெரிவித்துள்ளது. ஐஎம்சிஎல், நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனை குழுக்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு பகுதியாகும். டிசம்பர் 3ம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெலிகிராப் பத்திரிக்கை, மியான்மரைச் சேர்ந்த இளம் கிராம மக்கள், அவர்கள் உடல் உறுப்புகளை விற்க தூண்டப்படுவதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும் அந்த செய்தியில், மக்கள் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களது உறுப்புகள் பர்மாவைச் சேர்ந்த பணக்காரர்களுக்கு பொருத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றங்களை மறுத்துள்ள ஐஎம்சிஎல் செய்தி தொடர்பாளர், இது தவறான தகவல் என்றும், இது தொடர்பான விவரங்கள் அந்த பத்திரிகையாளர் உடன் பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.