நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தையை ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு நடத்த உள்ளது. மத்திய அமைச்சர்களான அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகிய 3 பேர் கொண்ட குழு மீண்டும் விவசாயத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் பயிர்களுக்கு உத்தரவாதமான விலை மற்றும் கடன் நிவாரணத்திற்கான கோரிக்கைகளில் உறுதியாக இருந்ததால், பிப்ரவரி 8, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடந்த முந்தைய பேச்சு வார்த்தைகள் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. இதற்கிடையில், போராட்டம் தொடரும், ஆனால் அமைதியாக தொடரும் என்று விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறியுள்ளார்.
தொடரும் விவசாயிகளின் போராட்டம்
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உறுதி செய்யும் சட்டத்தைக் கோரி, "டெல்லி சலோ" போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகள், விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்(2020-21-ல் இருந்து) மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதி" வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளது.