பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்
மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அடுத்த 6 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி மெய்தி-குகி இன மக்களிடையே துவங்கிய கலவரம் 4 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும் இதன் தீவிரம் சற்று குறைந்து காணப்பட்டதால் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அம்மாநிலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது. இதனிடையே இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறிப்பிட்ட அந்த 2 இனத்தினர் இடையே பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதுகாப்புக்கருதி வரும் வெள்ளைக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை
இதற்கிடையே, மணிப்பூர் மாநில இம்பால் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹோம்ஜித், இஜாம் என்னும் 2 மாணவர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியதாக புகைப்படங்களோடு கூடிய செய்திகள் வெளியானது. இதனையடுத்து மீண்டும் மணிப்பூரில் கடந்த 3 நாட்களாக வன்முறை வெடித்து பதற்றம் நிலவுகிறது என்று கூறப்படுகிறது. இதனால் கொடுக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கொலை விவகாரத்தினை எதிர்த்து நேற்று(செப்.,26)பள்ளி-கல்லூரி மாணவர்கள் முதல்வர் அலுவலகம் நோக்கிச்செல்ல முயன்ற நிலையில் அவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புக்கருதி வரும் வெள்ளைக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சட்ட-ஒழுங்கு அதிகாரம் உச்சவரம்பிலிருக்கும் பட்சத்தில், 19 காவல் எல்லைகளை தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டு துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.