பயிற்சி மையங்களில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்க முடியாது: மத்திய அரசு உத்தரவு
இந்திய கல்வி அமைச்சகம், நாட்டில் உள்ள பயிற்சி மையங்களை இயக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 'பயிற்சி மையத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் 2024' என்ற தலைப்பில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள், இந்தியாவில் கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்- education.gov.inஇல் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள், மாணவர்களின் மேற்பார்வை மற்றும் படிப்புத் திட்டங்கள், போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வியாளர்களுக்கான ஆதரவை மேம்படுத்துவதற்காக பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான தரநிலைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. புதிய அறிக்கைப்படி,' பயிற்சி மையம்' என்பது, 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட, பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழக அளவில் மாணவர்களுக்குப் படிப்புத் திட்டங்கள், போட்டித்தேர்வுகள் அல்லது கல்வி ஆதரவிற்கான பயிற்சியை வழங்கும், ஒரு தனிநபரால் நடத்தப்படும் மையம் ஆகும்.
வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள்-1
பயிற்சி மையங்கள், குறிப்பிட்ட படிவங்கள், கட்டணங்கள் மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆவணத் தேவைகளுக்கு இணங்க, உள்ளூர் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பயிற்சி மையத்தில் பல கிளைகள் இருந்தால், ஒவ்வொரு கிளையும் தனித்தனியாகக் கருதப்படும். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பதிவு விண்ணப்பங்கள் தேவைப்படும். எந்தப் பயிற்சி மையமும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்கவோ அல்லது பட்டப்படிப்பைக் காட்டிலும் குறைவான தகுதியைக் கொண்ட ஆசிரியர்களை ஈடுபடுத்தவோ முடியாது. 16 வயதுக்குட்பட்ட, மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை மட்டுமே சேர்க்கை அனுமதிக்கப்படும்.
வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள்-2
பாடங்கள், கால அளவு, வகுப்புகள், பயிற்சிகள், விடுதி வசதிகள், கட்டணம், வெளியேறும் கொள்கைகள் மற்றும் கட்டணத் திருப்பிச் செலுத்துவதற்கான நடைமுறைகள் பற்றிய விவரங்கள் முக்கியமாகக் காட்டப்படும் விரிவான ப்ரோஸ்பெக்டஸில் இருக்க வேண்டும். அதற்கான ரசீது வழங்க வேண்டும். பயிற்சி மையங்களுக்கு எதிரான புகார்களை அளிக்க மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள்/ஊழியர்களுக்கு சரியான முறைமை வழங்ப்பட வேண்டும். கூடுதலாக, பயிற்சி மையங்களும், மாணவர்கள் அல்லது பெற்றோர்களுக்கு எதிராக புகார்களை பதிவு செய்யலாம். தகுதிவாய்ந்த அதிகாரம் அல்லது அரசாங்கத்தால் நிறுவப்பட்ட விசாரணைக் குழு இந்த புகார்களை முப்பது நாட்களுக்குள் தீர்க்கும். பாடநெறிக் கட்டணம் மற்றும் விடுதி தொடர்பான கட்டணங்கள் உட்பட, பாடநெறியின் போது எந்தக் கட்டணமும் அதிகரிப்பது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட படிப்பு நேரம்
பயிற்சி மையங்கள், ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு சதுர மீட்டரை ஒதுக்க வேண்டும். தீ பாதுகாப்பு, கட்டிடக் குறியீடுகளுடன் இணங்குவது, தீ மற்றும் கட்டிட பாதுகாப்புச் சான்றிதழ்களைப் பெறுவது போன்றவற்றை பெறுவது கட்டாயமாகும். போதுமான மின்மயமாக்கல், காற்றோட்டம், விளக்குகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். பயிற்சி மையத்தில் சிசிடிவி கேமராக்கள், முதலுதவி பெட்டி மற்றும் மருத்துவ உதவிக்கான அணுகல் ஆகியவை இருக்க வேண்டும். சீரான வருகையை உறுதி செய்வதற்காக வகுப்பு அட்டவணைகள் வழங்கப்பட வேண்டும். அவை, வழக்கமான பள்ளி நேரங்களை குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் கட்டாய வாராந்திர விடுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.