Page Loader
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

எழுதியவர் Sekar Chinnappan
Apr 24, 2025
07:37 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு நேபாளி உட்பட 26 பேர் உயிரிழந்தது குறித்து விவாதிக்க, மத்திய அரசு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கும்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மோசமான தாக்குதல்

புல்வாமாவிற்கு பிறகு நடக்கும் மோசமான தாக்குதல்

முன்னதாக, தாக்குதலின் விவரங்கள் குறித்து அமித்ஷா மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் விளக்கினர். பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதல், 2019 புல்வாமா குண்டுவெடிப்புக்குப் பிறகு இப்பகுதியில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும். இதற்கு பதிலளிக்கும் விதமாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உறுதியான ராஜதந்திர நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் அட்டாரி சோதனைச் சாவடியை மூடுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.