சீன காய்ச்சல் எதிரொலி: மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. காய்ச்சல் மற்றும் குளிர்காலம் வரவிருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் மற்றும் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், மருத்துவ ஆக்ஸிஜன், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பிபிஇ போன்ற தயார்நிலை நடவடிக்கைகளை சரிபார்க்குமாறு அமைச்சகம், மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக, சீனாவில் பரவும் இந்த மர்ம நிமோனியா காய்ச்சலால் இந்தியாவிற்கு ஆபத்து குறைவாக இருப்பதாக அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் என்ன?
குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே, காய்ச்சல் போன்ற நோய் மற்றும் கடுமையான சுவாச நோய்களின் அறிகுறிகள் இருப்பது கண்காணிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. அதோடு, அவர்களின் மூக்கு மற்றும் தொண்டை சவ்வு மாதிரிகள், நோய்க்கிருமிகளுக்கான பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அதை பற்றி மத்திய அரசிற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. புதிய நோய்க்கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்று சீனா, உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்ததால், தற்போதைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சகம் தனது கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.